முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் வெள்ள அபாயம்!

மேட்டூரிலிருந்து கொள்ளிடத்தில் சுமார் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் வேளையில் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளும், வடிகால் பகுதிகளுமான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:06 PM
பகிர்:

மேட்டூரிலிருந்து கொள்ளிடத்தில் சுமார் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் வேளையில் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளும், வடிகால் பகுதிகளுமான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படாததாலும், ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்துள்ளதாலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டியை நீரை தராததாலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த மூன்று மாதகாலமாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி முற்றிலும் வறண்டு போனது. இதனால் ஏப்ரல் 27-ம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வீராணம்ஏரியின் மேல்கரையை தூர்வார தமிழகஅரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் கடந்த மூன்று மாதகாலமாக ஏரி வறண்டு இறந்தும் தூர்வாரும் பணி தொடங்கப்படவில்லை.

மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரி நீரை சுமார் 1 லட்சம் கனஅடி கொள்ளிடத்தில் வெளியேற்றப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கேரளாவிலும், கர்நாடகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் கூடுதலாக நீர் வருவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கூடுதலாக வரும் உபரி நீர் மேட்டூரிலிருந்து கொள்ளிடத்தின் வழியாக வெளியேற்றப்படும். அப்படி கூடுதலாக நீர் வெளியேற்றும் போது சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் சென்று கலக்கும். அப்போது சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் கொள்ளிடக்கரையோர கிராமங்களில் இந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி.

குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் அனைத்து ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்தும், தூர்ந்தும் போய் உள்ளது. தற்போது கல்லணையிலிருந்து கீழணைக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம்ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டு இந்த வாரத்தின் இறுதியில் சென்னைக்கு மீண்டும் குடிநீர் கொண்டு செல்ல பொது்ப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கூடுதலாக நீர் வரும் போது நீர் வடியாமல் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் 2005ம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தது போல், இந்த ஆண்டு சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.