டாஸ்மாக் கடையை அகற்றகோரி வாலிபர் சங்கத்தினர் தூக்கில் தொங்கி நூதனப் போராட்டம்
சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சியில் நாதஸ்வரகலைஞர் அருணாசலம் சிலையை அவமதிக்கும் வகையில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூக்கில்
சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சியில் நாதஸ்வரகலைஞர் அருணாசலம் சிலையை அவமதிக்கும் வகையில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூக்கில் தொங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் காருக்குறிச்சி பஸ்நிலையம் அருகில் காருக்குறி்ச்சி அருணாசலம் சிலை அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையினால் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்,மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கடையை அகற்ற கோரி இந்தியஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சனிக்கிழமை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடையை அப்புறப்படுத்த 6 மாத அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது இதையடுத்து தடையை மீறி இன்று காருக்குறிச்சி டாஸ்மாக் கடை முன்பு இந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயகவாலிபர் சங்கம் சார்பில் தூக்கில் தொங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி மல்லிகா, லோகநாயகி, இசக்கிமுத்து, உதயசூரியன், கார்த்திகேயன்,ஜோதிபாசு ஆகியோர் டாஸ்மாக் கடை முன்பு கயிறு கட்டி தூக்கில் தொங்குவதுபோல காட்சியளித்தனர். கடையின் அருகில் தூக்கில் உருவப் பொம்மை தொங்கவிடப்பட்டிருந்தது.
போராட்டத்துக்கு வெள்ளங்குழி ஊராட்சித் தலைவி எஸ். சிவகாமி தலைமை வகித்தார். காருக்குறிச்சி ஊராட்சித் தலைவி பி. சுந்தரவள்ளி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வி. முருகேசன் முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் கே.ஜி. பாஸ்கரன்,ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைச் செயலர் பி. கற்பகம், துணைத் தலைவர்கே.ஏ. மல்லிகா, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலர் ஜி. நடராஜன், ஒன்றியபொருளாளர் டி. ரவி, பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடையை அகற்ற அதிகாரிகள் உறுதி அளித்தால்தான் போராட்டத்தை விலக்கிகொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் வட்டாட்சியர்,காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.