முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் விலகி செல்லக்கூடாது: ப.சிதம்பரம்

சிதம்பரம் அருகே கீரப்பாளைய செட்டிக்குளத்தில் இன்று நடைபெற்ற கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் தாயார் ச.கமலம் அம்மாள் படத்திறப்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:47 AM
பகிர்:

தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் விலகிச் செல்லக்கூடாது. தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து வெளியேறிவிடக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே கீரப்பாளைய செட்டிக்குளத்தில் இன்று நடைபெற்ற கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் தாயார் ச.கமலம் அம்மாள் படத்திறப்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியது: கே.அழகிரி படிப்படியாக முன்னேறி பதவிகளை பெற்று ஆற்றலுடன் பணியாற்றி வருபவர். தற்போது காங்கிரஸ் இயக்கத்தின் தூனாகவும், முன்னோடி தலைவராகவும், முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி அல்ல. மாநிலத்தில் அதிமுக பெரிய கட்சியாக உள்ளது.

அதற்கு ஈடான கட்சியாக திமுக உள்ளது. தமிழகத்தில் முதல் கட்சி என்ற பெருமையை 1967-ல் காங்கிரஸ் கட்சி இழந்தது. அதை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை 1969-ல் துளிர்விட்டது. 1970-ல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு படாமல் இருந்திருந்தால் தொடர்ந்து காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி இருந்திருக்கும். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று பிளவுபடாமல் இருந்திருந்தாலும், மூத்த தலைவர் காமராஜர் இந்திருந்தாலும் 1971-ல் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி முதல் கட்சியாகவே இருந்திருக்கும்.

காங்கிரஸ் கட்சி இந்தியாவில் முதல் கட்சியாக உள்ளது. தமிழகத்தில் முதல் கட்சியாக இல்லை என்ற ஆதங்கம் எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை ஆளுமையில் உள்ளது. இருந்தாலும் தமிழ்நாடும், தமிழக மக்களும் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி சென்றுவிடக்கூடாது. அன்னிய நாட்டு கொள்கையாக இருந்தாலும் சரி, தேசப் பாதுகாப்பு கொள்கையாக இருந்தாலும் சரி, பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சி எடுக்கும் நிலைதான் இந்தியாவிற்கு நல்லது. அதுதான் தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் நல்லது. தமிழ்நாடு தனி முடிவெடுத்தால் அது நல்லதல்ல. உலக நாடுகள் வகுக்கக்கூடிய அன்னிய நாட்டு கொள்கையை அனுசரித்து, அதை உணர்ந்து, ஆராய்ந்து பார்த்துதான் நமது அன்னிய நாட்டு கொள்கையை உருவாக்கி கொள்ள முடியும்.

அதேபோல நம்மை சுற்றியுள்ள நாடுகளுடான நமது உறவை, இந்தியா நாட்டிற்கு எது நல்லது என்று பார்த்துதான் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். அனைத்து அண்டை நாடுகளுடன் பகை நாடாக இந்தியா இருக்க முடியாது. நாம் அவர்களை பகைத்துக் கொள்வதால், உலகம் அதை பகைத்துக் கொள்ளும் என்று நினைப்பது அறியாமை. பொருளாதாரமாக இருக்கட்டும், அன்னிய நாட்டு கொள்கையாக இருக்கட்டும், சமுதாயக் கொள்கையாக இருக்கட்டும், இந்தியாவிற்கு எந்த கொள்கை நல்லது என்பதை தேசம் தழுவிய ஒரு அரசியல் கட்சி எடுக்கும் போது, அதை ஒட்டியே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அதே நிலையை எடுப்பதுதான் நல்லது. இந்தியாவிற்கு நல்லது எது என காங்கிரஸ் அரசு முடிவு எடுத்து செயல்படுத்துகிறது. அதனை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி பங்கேற்று பேசினார். அரசியல்வாதிகளுக்கு பதவி வரும்போது பணிவு வர வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் எதையும் தெரியும் என்று நினைக்கூடாது. தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். என்ன படித்திருந்தாலும் அனுபவத்தை பெற்றால்தான் வல்லமை பெற முடியும். அதை நான் நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்திடம் கான்கிறேன். கே.எஸ்.அழகிரி எளிமையாக இருந்து கட்சி வித்தியாசமின்றி சிறந்த மக்கள் சேவை ஆற்றிவருபவர் என வி.நாராயணசாமி தெரிவித்தார்.

முன்னதாக ச.சவுந்திரபாண்டியன் வரவேற்றார். விழாவில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்பிகள் டாக்டர் ப.வள்ளல்பெருமான், பீட்டர்அல்போன்ஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, ஏ.கோப்பன்னா, கராத்தே தியாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கீரை.வீரமணி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →