காய்கறி கடும் விலை உயர்வு: சைவ உணவுப்பிரியர்கள் அவதி
சிதம்பரம் நகரில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெல்லாரி கிலோ ரூ.70-க்கும், சிறிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.75-க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ.45-க்கும், கேரட்
சிதம்பரம் நகரில் காய்கறி கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக சைவ உணவுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சிதம்பரம் நகரில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெல்லாரி கிலோ ரூ.70-க்கும், சிறிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.75-க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ.45-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், செளசெள கிலோ ரூ.40-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.40-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.50-க்கும், புது இஞ்சி கிலோ ரூ.160-க்கும், பழைய இஞ்சி கிலோ ரூ.220-க்கும், தக்காளி கிலோ ரூ.16-க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்ந்துள்ளதால் சைவ உணவுப் பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஹோட்டல் வியாபாரிகள் காய்கறி விலை கடும் உயர்வால் ரூ.40-க்கும் ஒரு சாப்பாடு வழங்க முடியாத நிலையில் உள்ளனர். சில ஹோட்டல்கள் விலை உயர்ந்துள்ள காய்கறிகளை தவிர, குறைவாக விலை உள்ள தக்காளி, உருளை உள்ளிட்ட காய்கறிகளை மட்டும் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி, பண்ருட்டி பகுதியில் காய்கறி விலை குறைவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு குறித்து காய்கறி வியாபாரிகளை கேட்ட போது ஆந்திராவில் ஸ்ட்ரைக் நடைபெறுவதாலும், கர்நாடகத்தில் பலத்த மழை பெய்வதால், வெளிமாநிலங்களில் இருந்து வர வேண்டிய பெல்லாரி உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்திற்கு வராததால் விலை உயர்ந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழகத்திலேயே, கடலூர் மாவட்டத்திலேயே அதிகம் விளையும் கத்திரிகாய் கிலோ ரூ.45-க்கு விற்பதுதான் வேதனையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே சிதம்பரத்தில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த சென்னையில் உள்ளது போல் மலிவுவிலை காய்கறி கடைகளை அரசு திறக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.