வீணாக கடலில் கலந்த நீர் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட எம்எல்ஏ கோரிக்கை
கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் பயன்படுத்த முடியாமல் கடலில் கலந்து வீணானது குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் பயன்படுத்த முடியாமல் கடலில் கலந்து வீணானது குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டமன்ற கொறடாவான கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றன. கடந்த ஆண்டு மோசமான வறட்சி ஏற்பட்டு தங்களது அரசு வறட்சி நிவாரணம் அளித்ததால் விவசாயிகள் ஒரளவு காப்பாற்றப்பட்டார்கள். கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை மறுத்து வருகிறது. இவ்வாறு தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல நேரங்களில் காவிரியில் கிடைக்கும் உபரிநீர் கடலில் கலந்து வீணாவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
தற்போது கர்நாடகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியதால் வேறுவழியின்றி உபரிநீரை மேட்டூருக்கு திறந்து விட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் எந்த பயனும் இல்லாமல் கடலில் கலந்து வீணாகியுள்ளது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் 20 டிஎம்சி கண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. அதே சமயம் கொள்ளிடம் ஆற்றின் இரு பக்கங்களில் உள்ள வயல்கள், வாய்க்கால்கள், குளங்கள் அனைத்து வறண்டு வெடித்து போய் கிடக்கின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் ஒரு பகுதி தண்ணீரை பயன்படுத்தி இருக்க முடியும்.
முன்கூட்டியே வீராணம்ஏரி, வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களை திறந்து தண்ணீரை சேமித்து பயன்படுத்தி இருக்க முடியும். தற்போது கீழணையில் ஷட்டர்கள் பழுதடைந்து நீர் சேமிக்க முடியாமல் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. கடந்த பல மாதங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கீழணை பராமரிப்பு பணிகளை கவனிக்கவில்லை. வாய்க்கால்கள், கால்வாய்கள் தூர்வாரப்படாமல் செடிகள் மண்டியும், பல இடங்களில் மண் சரிந்தும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும் கொள்ளிடம் ஊற்று நீரை தேக்கி வடக்குராஜன் வாய்க்கால் மூலம் கான்சாகீப் வாய்க்கால் மூலம் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த கொள்ளிடத்தில் அணை கட்டும் திட்டத்தை அரசு தாமதமில்லாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும் வறட்சிக்கான பயிர் காப்பீட்டு தொகை மற்றும் தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு வங்கி கடனில் வரவு வைக்காமல் ரொக்கமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டு விவசாயிகளிடம் சம்பா சாகுபடிக்கு பழைய கடனை கேட்காமல், புதிய பயிர்க் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.