ரேசன் பொருள்களை ஊழியர்கள் கடத்தினால் குண்டர் சட்டம்:செல்லூர் ராஜு எச்சரிக்கை
தமிழகத்தில் இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் வேளாண் விளைபொருள்களை சேமிக்க 2,770 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்களில் மட்டும் 1,146 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோன்று கிடங்குகள் கட்டப்படவில்லை.
ரேசன் பொருள்களை ஊழியர்கள் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் வேளாண் விளைபொருள்களை சேமிக்க 2,770 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்களில் மட்டும் 1,146 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோன்று கிடங்குகள் கட்டப்படவில்லை.
பருவமழை பொய்த்தது, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்தது போன்ற காரணங்களால் கடந்த ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை தவிர பிற மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதோடு மட்டுமன்றி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற எந்த மாநிலத்திலும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.10,044 கோடியை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ரேசன் பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் முற்றிலும் குறைந்துள்ளது. ரேசன் பொருள்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேசன் பொருள்களை ஊழியர்கள் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என்றார்.
ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, கருங்கல்பாளையம் வேளாண் கூட்டுறவுச்சங்கம், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் பெ.சீத்தாராமன், மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என்.கிட்டுச்சாமி, ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், சிந்தாமணி தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் த.பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.