கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்டுவதை பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும்: தமிழக உழவர் முன்னணி
கர்நாடகாவில் மேகத்தாட்டு வனப்பகுதியில் ரூ.600 கோடி செலவில் காவிரியின் குறுக்கே மொத்தம் 50 டிஎம்சி கொண்ட மூன்று நீர் தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட
கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்ட முயற்சி செய்வதை பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகாவில் மேகத்தாட்டு வனப்பகுதியில் ரூ.600 கோடி செலவில் காவிரியின் குறுக்கே மொத்தம் 50 டிஎம்சி கொண்ட மூன்று நீர் தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்சிரா தெரிவித்துள்ளார். கர்நாடகத்திலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை தேக்கி மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட்ட பிறகு, காவிரியில் புதிய அணைகள் கர்நாடகம் கட்டுவதற்கு முழு உரிமையுண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட மூன்று அணைகள் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது, பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும். வெள்ளக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தையும் இந்த மூன்று அணைகளும் தேக்கி கொள்ளும். உபரி நீர் முழுவதையும் ஒரு சொட்டுக்கூட தமிழ்நாட்டிற்கு விடாமல் தேக்கிக் கொள்ள புதிய அணைகள் கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது. காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு உபரி நீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ளதென்று அம்மாநில சட்ட அமைச்சர் கூறுவது முழுப்பொய். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 270 டிஎம்சி நீரை பயன்படுத்திக் கொள்ளும் உரிமைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் உபரி நீரை தேக்கிக் கொள்ள கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த நீரும், தமிழ்நாட்டிற்கு 192 டிஎம்சி நீரை கொடுத்துவிட்டுதான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ, தீப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் உள்ள கர்நாடகத்திற்கு மத்தியஅரசின் மறைமுக ஆதரவு உள்ளது என்ற துணிச்சலில்தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு மத்தியஅரசுக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை மத்தியஅரசு அறிவிக்க வேண்டும். இப்பொறுப்புகள் மத்தியஅரசுக்கு இருக்கிறது என்றால், பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக இதில் தலையிட்டு புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகஅரசு உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகத்திற்கு எதிராகவும், மத்தியஅரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள விவசாயிகள், தமிழின உணர்வாளர்கள் திரண்டு கர்நாடகம் அணை கட்டுவதற்கான கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.