முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க திட்டம்

திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆபரேஷன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று வேலூர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 PM
பகிர்:

திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆபரேஷன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று வேலூர் மண்டல வனப் பாதுகாவலர் கல்யாண சுந்தரம், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (புலிகள் திட்டம்) மல்கானி இருவரும் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள்,

இங்குள்ள இந்த 6 காட்டு யானைகளும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வந்துள்ளன. அப்போது 13 ஆக இருந்து, பின்னர் 7 ஆகக் குறைந்துள்ளன. ஒரு யானை ஆலங்காடு பகுதியில் சுற்றித் திரிகிறது. மற்ற 6 யானைகளும், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

காட்டில் இருந்த போது அவற்றுக்கு இருந்த பழக்க வழக்கங்கள் மாறியுள்ளது. தற்போது, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடுவது, சாலையில் நடமாடுவது என்று கட்டற்று சுற்றி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே, யானைகளைப் பிடிப்பதற்கு ஆப்பரேஷன் மலை என்ற திட்டத்தினை தீட்டியுள்ளோம். இதற்காக, அரசு 73 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இவற்றைப் பிடித்து, ஆனைமலை முதுமலை காடுகளில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை இவற்றைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. யானைகள் 4-ம் 2-மாகப் பிரிந்து சென்றன.

இன்று மாலை 4 மணிக்கு அவற்றைப் பிடிக்க திட்டம் தீட்டியுள்ளோம். இன்று மாலை நேரத்தில் அவை வெளிவரும்போது, பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ராவந்தவாடி பகுதியில் காப்பு காட்டில் அவை தங்கியுள்ளன.

வாழை மரம், மாங்காய் உள்ளிட்டவற்றைப் போட்டு நேற்று மாலை ஒத்திகை மேற்கொண்டோம். அவை 5 நிமிடங்கள் மட்டும் ஒரே இடத்தில் இருந்து அவற்றை உண்டாலே போதும்; மயக்க ஊசி போட்டு பிடித்து விடுவோம். அதற்காக கம்பு பலாப்பழம் உப்பு உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்துள்ளோம். அவற்றை ஒரே இடத்தில் போடுவோம். காட்டில் இருந்து வெளிவரும் அவை, 10 நிமிடமாவது நிற்கும். அப்போது மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஊசியால் சுடுவர். அதன் பின்னர் அவை பத்து நிமிடங்களில் மயக்கமடையும். அவற்றை கும்கி யானைகள் துணையுடன் லாரிகளில் ஏற்றுவோம். அதற்காக கும்கி யானைகள் 5 வரவழைக்கப்பட்டுள்ளன.

ஜேசிபி இயந்திரங்கள் மூலம் லாரியில் ஏற்ற வசதியாக, பிரத்யேகமாக பெரிய லாரிகள் சங்கிலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

மேலும், புதுதில்லி மற்றும் மும்பையில் இருந்து மயக்க மருந்து (ஜெய்லோஸின்) வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தண்டராம்பட்டு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டு, மாலை 4 மணி அளவில் மின்சாரமும் துண்டிக்கப்படும் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.