தற்போதைய செய்திகள்

தரமற்ற 24 மருந்துப் பொருள்களுக்கு மருத்துவ சேவைக்கழகம் தடை

ஜெகஜோதி

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் 24 மருந்துப் பொருள்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் தடைவிதித்துள்ளது.

இதில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த 15 மருந்துகளும் தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 9 மருத்துவப் பொருள்களும் அடங்கும். கடந்த எட்டு மாதங்களில் நடத்திய பரிசோதனையில் இந்த பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்தான் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இதற்கென்று ஒவ்வொரு ஆண்டும் அரசு 210 கோடியை ஒதுக்குகிறது.

மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டென்டர்கள் விடப்பட்டு, அதில் குறைந்த தொகையை நிர்ணயிக்கும் நிறுவனத்தின் மருந்துகள் வாங்கப்படும். கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் அந்தந்த கிடங்குகளில் வைத்து பரிசோதனை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு தேதியில் தயாரான மருந்துகள் அனைத்தும் சுமார் 5 அல்லது 6 முறை பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சேவைக்கழகம் நிர்ணயித்துள்ள கோட்பாடுகளின் கீழ் வராத மருந்துகள் தரமற்ற மருந்துகளாக கருதப்பட்டு, கழகத்தின் மறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.

இதுகுறித்து மருத்துவ கழகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இருமல் மருந்து, காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மாத்திரை, நெஞ்செரிச்சலுக்கான மருந்துகள் உள்ளிட்ட 15 மருந்துகளை தடை செய்துள்ளோம்.

மருந்துகள் பயன்படுத்தப்படும் அரசு மருத்துவமனையோ, அந்த மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைக்கும் மருத்துவரோ மருந்துகள் குறித்து புகார் தெரிவித்தால் அதன் அடிப்படையிலும் பரிசோதனை நடத்தப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் தடைசெய்யப்படும். மேலும் கையிருப்பில் உள்ள அந்த நிறுவனத்தின் மருந்துகள் உடனடியாக திருப்பி அனுப்பப்படும்.

சுகாதாரத் துறையை பொருத்தவரை தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதால், தமிழக மருத்துவ சேவைக்கழகம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை தடை செய்துவிட்டால் மற்ற மாநிலங்களும் அதன் கொள்முதலை நிறுத்திக் கொள்ளும்.

தடை செய்யப்பட்ட மருந்துகள், அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் விவரங்கள, எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் தமிழக மருத்துவ சேவைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT