சிதம்பரம் அருகே நுண்ணூட்ட உர மூட்டைகள் கடத்தல்: உதவி வேளாண் இயக்குநர் உள்ளிட்ட இருவர் கைது
சிதம்பரம் அருகே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நுண்ணாடு உர மூட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய மினி லாரியில் கடத்த முயன்றதாக கீரப்பாளையம் வட்டார உதவி வேளாண் இயக்குநர் பி.லட்சுமணன் உள்ளிட்ட இருவரை புவனகிரி போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நுண்ணாடு உர மூட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய மினி லாரியில் கடத்த முயன்றதாக கீரப்பாளையம் வட்டார உதவி வேளாண் இயக்குநர் பி.லட்சுமணன் உள்ளிட்ட இருவரை புவனகிரி போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீர்ப்பாளையம் வட்டார வேளாண் அலுவலக குடோனில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நுண்ணூட்ட உர மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த டிச.3-ம் தேதி காலை அலுவலக குடோனிலிருந்து வட்டார உதவி வேளாண் இயக்குநர் லட்சுமணன் முன்னிலையில் நுண்ணூட்ட உர மூட்டைகளை மினி லாரியில் வெளி மார்க்கெட்டில் விற்பனைக்காக ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அங்கு சென்று மினிலாரியை கைப்பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு லாரியை கைப்பற்றினர்.
பின்னர் மினிலாரியில் ஏற்றி உர மூட்டைகளை கடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புவனகிரி காவல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் சுமார் 25 பேர் புதன்கிழைமை மாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்த மறியல் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சபாநாயகம் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மினிலாரியில் உர மூட்டைகளை கடத்தி விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக உர மூட்டைகளை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக கவரப்பட்டைச் சேர்ந்த உதவி வேளாண் இயக்குநர் பி.லட்சுமணன் (54), மினிலாரி டிரைவரான சிதம்பரத்தைச் சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன் (47) ஆகிய இருவரை புவனகிரி போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு:
உரமூட்டைகளை கடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி புதன்கிழமை மாலை புவனகிரி காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் பி.வாஞ்சிநாதன் உள்ளிட்ட 25 பேர் மீது புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.