முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகையில் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை  உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட திமுக மீனவரணி சார்பில் நாகை தலைமை

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை  உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட திமுக மீனவரணி சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், அவர்களின் 70 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தையும், இலங்கை அதிபர் ராஜபக் ஷவைக் கண்டிப்பது.  இந்திய, இலங்கை மீனவர்களை அழைத்துப் பேசி 2 நாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிப்பை மேற்கொள்ள வழிவகை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதால் மட்டும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திடாது. 2 நாட்டு மீனவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய, இலங்கை மீனவர்கள் சுமூகமாக மீன்பிடிப்பை மேற்கொள்ள வழிவகை செய்ய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்றார்.

நாகை மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் என். கௌதமன், துணை அமைப்பாளர்கள் ஜி.என். ரவி, எஸ்.டி. தமிழ்ச்செல்வம், எம். மணிமாறன், என். சிட்டிலிங்கம், கோ. பூமிதாஸ், மா. அஞ்சாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் அ. அம்பலவாணன், தலைமைச் செயற்குழு உறுபபினர்கள் பி. கல்யாணம், எஸ்.பி. தங்கையா, மாவட்ட அவைத் தலைவர் குமரவேல், மாவட்டப் பொருளாளர் திருமலைச்சாமி, துணைச் செயலாளர்கள் ஞானசேகரன், இளஞ்செழியன், ஜெ. இறைஎழில்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.கே. வேதரெத்தினம், கி. சத்தியசீலன், அன்பழகன், சித்திக் மற்றும் நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பிற அணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காலை சுமார் 8 மணிக்குத் தொடங்கி இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →