முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல் குவிண்டாலுக்கு ரூ.2636 வழங்க வேண்டும்: கீழணை பாசன விவசாயிகள் சங்க கோரிக்கை

தேசிய விவசாய ஆணையம் பரிந்துரையின்படி விலைவாசி உயர்விற்கு ஏற்ப நெல் குவிண்டாலுக்கு ரூ.2636 மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

தேசிய விவசாய ஆணையம் பரிந்துரையின்படி விலைவாசி உயர்விற்கு ஏற்ப நெல் குவிண்டாலுக்கு ரூ.2636 மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காட்டுமன்னார்கோயில் ஏ.ஆர்.மஹால் திருமண மண்டபத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம்.அன்பழகன், ஆர்.மணிவண்ணன், ஏவிஆர்.பழனிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.லட்சுமிகாந்தன், எம்.நஜிமுதின், எம்.பாரதி, சம்பந்தம், மாயா, எம்.ஆர்.பாலு உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்  கொள்ளிடம் ஆற்றில் 1836-ல் கட்டப்பட்ட கீழணை பழுதடைந்து உள்ளதால், ம.ஆதனூர், மேல்குமாரமங்கலம் இடையே பாசனத்திற்கு நீர் தேக்குகின்ற வரையில் கதவணை கட்ட வேண்டும்; ம.புளியங்குடி, சித்தமல்லி, நளன்புத்தூர், மாதிரிவேலூர் இடையே கதவணையும், கடல்நீர் உட்புகாமல் இருக்க படுக்கை அணை கட்டவும் தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்; கொள்ளிடம் ஆற்றிலிருந்து நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களில் கடலூர், நாகை மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நீரை எடுத்துச் சென்று பயன்பெற்று வருகின்றன.

ஏற்கனவே கொள்ளிடத்தில் மணல் அள்ளப்பட்டதால், கடல்நீர் 25 கி.மீ உட்புகுந்து கரையோர கிராமங்கள் குடிநீரும், ஆழ்துளை கிணறுகளிலும் உவர் நீராக மாறிவிட்டது. எனவே கொள்ளிடத்தில் மேல்பருத்திகுடி, சி.அரசூர், ஆழங்காத்தான், ஓமாம்புலியூர், கஞ்சங்கொல்லை ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதை கைவிட வேண்டும்; வீராணம்ஏரியை தூர்வார முதல் கட்டமாக ரூ.40 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. உடனடியாக ஏரியை தூர்வாரும் பணியை தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும்; டெல்டா மாவட்டங்கள் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.