அண்ணாமலைப் பல்கலை. பதிப்புத்துறை வழிகாட்டியாக திகழ்கிறது: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறை அறிய நூல்களின் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்கிறது என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறை அறிய நூல்களின் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்கிறது என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள் என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் (டிச.23,24) நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கி இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டுப் பேசினார். தில்லி ஜவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் ரா.அறவேந்தன் நூல்களை பெறறுக்கொண்டு முதன்மையுரையாற்றினார்.
விழாவில் துணைவேந்தர் ம.திருமலை பேசியது:
அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்த்துறையில் உ.வே.சாமிநாதஐயர், கா.சு.பிள்ளை, வ.சுப.மாணிக்கம் உள்ளிட்ட பேரறிஞர்கள் பணியாற்றியுள்ளனர். பல்கலைக்கழக பதிப்புத்துறையில் கம்பராமாயணம், கீழை மேலை நாடுகளில் மெய்ப்பொருள் இயல், தமிழர் பண்பாட்டு வரலாறு உள்ளிட்ட அறிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. எழுவது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பாடல்கள் துக்கடாவாக பாடப்பட்டு வந்த நிலையை மாற்றி தமிழிசைக்கு உயிர் கொடுத்தவர் இப்பல்கலைக்கழக நிறுவனர் ராஜாசர் அண்ணாமலை அரசர்தான் என ம.திருமலை தெரிவித்தார். பேராசிரியர் ரா.அறவேந்தன் பேசுகையில் "பண்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்ற அறிஞர்களை வீட்டிற்கே சென்று அழைத்து, பணியில் அமர்த்தியவர் பல்கலைக்கழக நிறுவனர் அண்ணாமலை அரசர்தான்" என்றார்.
கருத்தரங்கு நிறைவிழாவில் பதிவாளர் என்.பஞ்சநதம் பங்கேற்று வாழ்த்துரையாற்றுகையில் தமிழியல்துறை அறிஞர்கள் வ.சுப.மாணிக்கம், பண்டிதமணி கதிரேச செட்டியார் ஆகியோரின் புலமையை நினைவு கூர்ந்து பேசினார். இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்தார். முனைவர் பா.திருஞானசம்பந்தம் வரவேற்றார். தமிழியல்துறை பேராசிரியர் ப.ஞானம் தொடக்கவுரையாற்றினார். முனைவர் ரா.மலர்விழி நன்றி கூறினார்.