முகப்பு
தற்போதைய செய்திகள்

டெங்கு அறிகுறிகளுடன் இரு மாணவர்கள் சேலம் மருத்துவமனையில் அனுமதி

ஆத்தூர் அருகேயுள்ள அப்பமசமுத்திரம் வடக்குக் காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரமுத்து. இவரது மகன்கள் அருண் (15), ஜெகன் (10). இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 10-ம்

Updated On : 28 டிசம்பர், 2013 at 6:51 PM
பகிர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் அருகேயுள்ள அப்பமசமுத்திரம் வடக்குக் காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரமுத்து. இவரது மகன்கள் அருண் (15), ஜெகன் (10). இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 10-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது.இதற்காக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இருவரையும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு மாணவர்களிடம் இருந்தும் வெள்ளிக்கிழமை ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு மாணவர்களும் உடனடியாக பொது வார்டில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டனர்.மேலும் அவர்களிடம் இருந்து மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் முடிவிலேயே இருவருக்கும் டெங்கு காய்ச்சல்தானா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஆத்தூர் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குளிர்காலங்களில் ஏற்படக் கூடிய காய்ச்சல் ஏராளமான பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.இருப்பினும் தொடர்ந்து சளி, காய்ச்சல் இருக்குமானால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் சில உயிரிழப்புகளும் நேரிட்டன. இதனால் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டிருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.