முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே சாமி கும்பிடும் தகராறில் வீடு சூறை: 6 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே சாமி கும்பிடும் தகராறில் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்து, வீட்டையும் சூறையாடிய சம்பவம் தொடர்பாக

Updated On : 7 பிப்ரவரி, 2013 at 3:39 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:50 PM

விருதுநகர் அருகே சாமி கும்பிடும் தகராறில் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்து, வீட்டையும் சூறையாடிய சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இது குறித்து ஆமத்தூர் போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே உள்ளது வடமலாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த இந்திராணிமுத்து(43). இவருக்கும்  பிரேமாமுனிசாமி(36) கோஷ்டிக்கும் இடையே சாமி கும்பிடுவதில் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 25.9.2012 அன்று பூவந்திபுரத்தில் உள்ள குலதெயவ வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வது குறித்து பங்காளிகளான  இந்திராணிமுத்து தரப்பினர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு எதிர்தரப்பைச் சேர்ந்த பிரேமாமுனிசாமி கோஷ்டியைச் சேர்ந்தோர் அரிவாள், கம்புகளுடன் வந்து எங்களை கலந்து பேசாமல் சாமி கும்பிடுவது பற்றி எப்படி பேசலாம் என கூறி தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் இதற்கு காரணம் இந்திராணிதான் எனக் கருதி சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தும், அரிவாளால் வெட்டவும் முயற்சி செய்தனர். அதற்குள் சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார். அங்கு வந்து அந்த கோஷ்டியினர் வீட்டின் ஓடுகளை சூறையாடியும், கதவுகளையும் உடைத்தனர்.

Advertisement

இது தொடர்பாக மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் இந்திராமுத்து புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நீதிபதி சசிரேகா முன் விசாரணைக்கு வந்தது. அதில், இந்தப் புகார் மனு மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் பிரேமா, மற்றும் அவரது கணவர் முனிசாமி, தங்கப்பாண்டி, செல்லப்பாண்டி, முத்தையா மற்றும் செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.