சாயப்பட்டறை நிறுவனம் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் முற்றுகை
சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் தனியார் சாயப்பட்டறை நிறுவனம் சாயப்பட்டறை வயல் வழியாக கடல் வரை குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியப்பட்டு
சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் தனியார் சாயப்பட்டறை நிறுவனம் சாயப்பட்டறை வயல் வழியாக கடல் வரை குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியப்பட்டு கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியப்பட்டு கிராமத்தில் சைமா என்ற தனியார் சாயப்பட்டறை நிறுவனம் விவசாயிகள் நிலங்கள் வழியாக கடல் வரை குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களும், கடல்வளமும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஏற்கனவே கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெரியப்பட்டு, சிண்ணான்டிக்குழி உள்ளிட்ட கிராமங்களில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து நாள் ஒன்றுக்கு 1.09 கோடி லிட்டர் நிலத்தடி நீரை எடுக்க உள்ளனர். இதனால் இப்பகுதியில் குடிநீர் உப்புநீராக வாய்ப்பு உள்ளது. எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும். தச்சம்பாளையம்-பெரியப்பட்டு வடிகால் வாய்க்கால் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. ஆனால் அந்த வடிகால் வாய்க்காலை சாயப்பட்டறை நிறுவனத்தினர் முழுவதுமாக மூடிவிட்டதால் மழைக்காலங்களில் வெள்ளநீர் வடியாமல் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பெய்த மழையில் சுமார் 1200 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. எனவே மூடப்பட்ட வடிகால் வாய்க்காலை மீண்டும் வெட்டித்தர வேண்டும். கிராமமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறை அமைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் உதவிஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனம் வேளாண் நிலங்கள் வழியாக பைப்புகள் புதைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியப்பட்டு கிராமத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால், பதிக்கப்பட்ட பைப்புகளை அகற்றக்கோரி நாளை(பிப்.23) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.