வறட்சியால் அழிந்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி சிதம்பரம் அருகே விவசாயிகள் சாலைமறியல்
சிதம்பரம் அருகே வறட்சியால் அழிந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று சாலைமறியல்
சிதம்பரம் அருகே மணலூரில் சிதம்பரம்-கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வறட்சியால் அழிந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்புவனகிரி ஒன்றியம் லால்புரம், வடக்குதில்லைநாயகபுரம், மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, சி.முட்லூர், தீத்தாம்பாளையம், மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களில் சேர்ந்த விவசாயிகள், சாகுபடி செய்து வறட்சியால் அழிந்து போன பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், விடுபட்ட விவசாயிகளுக்கு மறு கணக்கெடுப்பு செய்து அனைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமையில் மாவட்டத் தலைவர் கோ.மாதவன், ஆர்.சதானந்தம், ஆர்.ஆனந்தன், டி.வி.செந்தில், எம்.சுரேஷ்குமார், எம்.சாமபமூர்த்தி உள்ளிட்ட 50 விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் வட்டாட்சியர் க.தனசிங், வேளாண் உதவி இயக்குநர் கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விடுபட்டவர்களுக்கு மறு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.