சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்
சிதம்பரம் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு நிலம் கொடுத்த சிதம்பரம் தொப்பையான்தெருவைச் சேர்ந்த
சிதம்பரம் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு நிலம் கொடுத்த சிதம்பரம் தொப்பையான்தெருவைச் சேர்ந்த அமீனாபீவி, குருஐயர்தெருவைச் சேர்ந்த ஏ.வனஜா, அம்மாபேட்டையைச் சேர்ந்த சுந்தராம்பாள் ஆகியோருக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மேற்கண்ட மூவரும் சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் என்.சேதுராமன், கே.கலியமூர்த்தி ஆகியோர் மூலம் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை முடிவுற்று அமீனாபீவி, வனஜா ஆகியோருக்கு தலா ரூ.2,47,93 தொகையும், சுந்தராம்பாளுக்கு ரூ.1,17596-ம் வழங்க கடந்த 2009-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதுநாள் வரை தொகை வழங்கப்படாததால் மேற்கண்ட மூவரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா, சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக பொருள்களை ஜப்தி செய்து தொகையை வசூலிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து உதவிஆட்சியர் அலுவலகத்திற்கு அமீனா கந்தவேல் மற்றும் ஊழியர்கள், பயனாளிகள் ஆகியோர் இன்று வந்தனர். அப்போது உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இல்லாததால் உதவிஆட்சியரின் நேர்முகஉதவியாளர் அசோக்ராஜ், ஒரு வாரத்திற்குள் மூவருக்கும் காசோலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், நாளை(வியாழக்கிழமை) எழுத்துப்பூர்வமாக தருவதாக பயனாளிகளிடம் தெரிவித்து சமரசம் செய்ததால், ஜப்தி செய்யாமல் நீதிமன்ற ஊழியர்கள் திரும்பினர். இதனால் உதவிஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.