தொழிலாளர்கள் வருகைக்காக காத்திருக்கும் பின்னலாடை நகரம்: பொங்கல் விடுமுறைக்குச் சென்றவர்கள் திரும்புவது எப்போது?
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற லட்சக் கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் திரும்ப வருவதை எதிர்நோக்கி
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற லட்சக் கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் திரும்ப வருவதை எதிர்நோக்கி திருப்பூர் பனியன் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
திருப்பூர் பனியன் நிறுவனங்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களை நம்பியே இயங்குகின்றன. ஆண்டு முழுவதும் திருப்பூரில் உழைக்கும் இத்தொழிலாளர்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி தங்கள் சொந்த ஊருக்குச் சென்று சில நாள்கள் தங்கிவிட்டு வருவது வழக்கம்.
சொந்த ஊரில் உள்ள தங்கள் விவசாய நிலங்களை மேம்படுத்துவது, வீடுகளைப் பழுது பார்ப்பது, மகன், மகள் திருமண ஏற்பாடு, உறவினர்களைச் சந்திப்பது போன்ற சொந்த வேலைகளை இந்த ஒரு வார காலத்தில் கவனித்த பின்னரே தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் திரும்புவது வழக்கம்.
இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் சொந்த ஊரிலேயே இருந்து விடுவதும் உண்டு. சொந்த ஊர்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பும் வரை, திருப்பூர் தொழில் துறை மந்தமாகக் காணப்படும். தொழிலாளர் வரும்வரை ஒருவித நிலையற்ற தன்மை காணப்படும்.
பொங்கல் பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து 3 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றதால், எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படும் திருப்பூர் மாநகர வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் வருவதற்கு ஒரு வார காலம் ஆகும் என்கின்றனர் தொழில்துறையினர். வரும் திங்கள்கிழமை (ஜன. 21) இதில் சரிபாதி தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த தினங்களில் படிப்படியாக மீதமுள்ள தொழிலாளர்கள் வந்து சேர்வார்கள்.
வாழ்வு தரும் திருப்பூர்: திருப்பூர் தொழில்துறை, உள்நாட்டு பனியன் வர்த்தகம், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் என இருவிதமான நிலைகளில் இயங்கி வருகிறது. உள்நாட்டு வர்த்தகம் சீராக இருப்பதால், அதைச் சார்ந்த தொழிலாளர்களும், அதன் உப தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் என 1.5 லட்சம் தொழிலாளர்கள் உடனடியாக திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.
மழை பெய்யாத காரணத்தால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு, வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் விரைவில் திருப்பூர் திரும்புவார்கள் என்று தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது தேக்க நிலையில் காணப்படுகிறது. எனவே, ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப கூடுதல் நாள்கள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இஸ்ரேஸ் நாடுகளில் இருந்து பின்னலாடை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைத்திருப்பதால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தேக்க நிலையில் இருந்து மீண்டு வருகின்றன.
ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் தொழில் வர்த்தகத்தைத் தாங்கி நிற்பது உள்நாட்டு வர்த்தகம் தான். பல ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது உள்நாட்டு வர்த்தகத்திலும் ஈடுபடத் துவங்கியுள்ளன.
உள்நாட்டு வர்த்தக பனியன் நிறுவனங்களுக்கு குஜராத், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபார ஆர்டர்கள் அதிக அளவில் வந்திருப்பதாகவும், தொழிலாளர்கள் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியது: திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் சில தினங்களில் திருப்பூர் வந்தடைய வாய்ப்பு உள்ளது. வியாழக்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும். படிப்படியாக தொழிலாளர்கள் வருகையை அடுத்து முழு அளவில் இந்நிறுவனங்கள் செயல்படும்.
வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பனியன் நிறுவனங்கள் தான் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இடமாக உள்ளன. எனவே, திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் மேலும் அதிக அளவில் வரும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறையும் நீங்கும் என்றார்.
செகண்ட்ஸ் பனியன் சங்க (சிஸ்மா) தலைவர் பாபுஜி கூறியது: ÷ஆந்திரத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் அணியக்கூடிய இரு பாக்கெட் டிராயர், சாதாரண டிராயர் போன்ற உள்ளாடைகளுக்கான வியாபார ஆர்டர்கள் அதிக அளவில் திருப்பூருக்கு கிடைத்துள்ளன. உள்நாட்டு பனியன் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. தொழிலாளர்கள் வருகைக்காக தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன என்றார்.