மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை
நாகையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
நாகையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
நாகை அக்கரைப்பேட்டை, நடுத் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகள் விஜயகுமாரி(25). இவருக்கும், கடலூரைச் சேர்ந்த சரவணன் மகன் ராமு(36) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடலூரில் தனிக்குடித்தனம் நடத்தினர்.
மீன்பிடித் தொழிலாளரான ராமு, திருமணத்துக்குப் பின்னர் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம். இதையடுத்து, ராமுவுடன் அக்கரைப்பேட்டைக்குத் திரும்பிய விஜயகுமாரி, அக்கரைப்பேட்டையில் தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி மது அருந்த பணம் கேட்டு ராமு, விஜயகுமாரியிடம் தகராறு செய்துள்ளார். அவர், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமு, விஜயகுமாரி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.
இதில், பலத்தக் காயமடைந்த விஜயகுமாரி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் 2009-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி உயிரிழந்தார்.
இது குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமுவை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த பின்னர், ராமுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ். சோலைமலை வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.