மேலூர் கிரானைட் முறைகேடு: அரசுக்கு ரூ.1200 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார்
மதுரையில், அரசுக்கு சொந்தமான கண்மாய், புறம்போக்கு இடங்களில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக ரூ.1200 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது.
மதுரையில், அரசுக்கு சொந்தமான கண்மாய், புறம்போக்கு இடங்களில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக ரூ.1200 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக இரு கிரானைட் நிறுவனங்கள் மீது காவல்துறை மேலும் இரு புகார்களைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்கள் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருவாதவூரில் உள்ள கீழசுனைக்குளம் மற்றும் அதை ஒட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பிஆர்பி கிரானைட் நிறுவன அதிபர் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் பிரேம்குமார், உறவினர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 2 லட்சத்து 98,543.42 செ.மீ. கிரானைட் கற்களை வெட்டி, கடத்தியுள்ளனர் என்று விஏஓ அனுராதா மேலூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, கிரானைட் நிறுவன அதிபர் மற்றும் அதன் பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பிஆர்பி கிரானைட் நிறுவனத்தார் மீது 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதே பகுதியில் சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ், உமா, சூரியபிரகாஷ், ஹரிஹரன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சேர்ந்து ரூ.90.42 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி, கடத்தியதாக மற்றொரு புகாரும், மேலூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சிந்து கிரானைட் உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மேலூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.