மாணவர் காங்கிரஸ் தேர்தல்:வாசன் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றி
மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர்.மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுனில் ராஜா 1586 வாக்குகள்
மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர்.மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுனில் ராஜா 1586 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.மாணவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் இதர பொறுப்புகளுக்கு மண்டல வாரியாக மறு தேர்தல்கள் நடைபெற்று வந்தன. சென்னை மண்டலத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.
பதிவான வாக்குகள் அனைத்தும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு வரப்பட்டு, புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் பெரும்பாலான பதவிகளில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களே வெற்றி பெற்றனர்.துணைத் தலைவர் பதவிக்கு பாபு, ஈஸ்வரமூர்த்தி, அசோக்குமார், தினேஷ் கண்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் பதவிக்கு சபரிகணேஷ், ஜெயராஜ், மணிகண்டன், காளீஸ்வரி, மாநிலச் செயலாளர் பதவிக்கு பிரவீன், விக்ரமன், மணிகண்டன், ராது, தேசிய பிரதிநிதிகளாக மனோஜ், பிரவீன் ஆனந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மாநிலச் செயலாளர் பதவிக்கு ராது, ரஞ்சி என்ற இரட்டை சகோதரிகள் போட்டியிட்டனர். இதில் ராது வெற்றி பெற்றார்.வெற்றிபெற்ற அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனிடம் வாழ்த்து பெற்றனர்.காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கட்சியின் பெருமையைக் காப்பாற்றும் வகையிலும் அனைவரும் செயல்பட வேண்டும் என்று ஞானதேசிகன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.வெற்றி பெற்றவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து வெற்றிபெற்றவர்கள் மரியாதை செலுத்தினர்.