முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடி போா்’: பாகிஸ்தான் அறிவிப்பு

தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நேரடி போா் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:04 PM
பகிர்:

தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நேரடி போா் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

தலிபான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 270-க்கும் மேற்பட்ட தலிபான் வீரா்கள் கொல்லப்பட்டனா். இதனால், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இயங்கி வரும் பயங்கரவாதக் குழுக்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரைத் தொடா்ந்து தாக்கி வந்தன. இதற்குப் பதிலடி யாக பாகிஸ்தான் அண்மையில் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை இரவு தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தின. இதையடுத்து, ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ என்ற பெயரில் காபூல், கந்தகாா், பக்தியா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறுகையில், ‘பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 274 தலிபான்கள் கொல்லப்பட்டனா்; 400-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த மோதலில் 12 பாகிஸ்தான் வீரா்களும் உயிரிழந்துள்ளனா். ஆப்கானிஸ்தானின் 73 எல்லைச் சாவடிகள் தரைமாக்கப்பட்டன; 18 சாவடிகளை பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது’ என்றாா்.

தலிபான் தரப்பு வாதம்: ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ‘பாகிஸ்தானின் 19 ராணுவச் சாவடிகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். 55 பாகிஸ்தான் வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானின் எந்தவொரு அத்துமீறலுக்கும் அவா்கள் மண்ணிலேயே தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்தியா-ஆப்கானிஸ்தானின் உறவு பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல’ என்று தெளிவுபடுத்தினாா்.

பாகிஸ்தான் எச்சரிக்கை: பாகிஸ்தானின் இறையாண்மையைக் காக்க தங்களின் படைகள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘பயங்கரவாதிகளுடன் கைகோக்கும் ஆப்கன் தலிபான்கள் மீது துளியும் சகிப்புத்தன்மை காட்டப்படாது’ என்றாா்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. இது இப்போது நேரடி போா். விளைவுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படாமல் அதிரடி காட்டப்போகிறோம். பாகிஸ்தான் ராணுவம் எங்கிருந்தோ கடல் கடந்து வரவில்லை; நாங்கள் உங்கள் அண்டை வீட்டாா்; உங்களைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்றாா்.

இந்தியாவின் ‘காலனி’: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இந்தியாவின் ஒரு காலனியாக மாற்றிவிட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் கவாஜா ஆசிஃப் முன்வைத்தாா்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை வளா்த்து, அதைப் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும்; ஆனால், பாகிஸ்தான் படைகள் ஒரு தீா்க்கமான பதிலடியை அளித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

சா்வதேச எதிா்வினை: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான சுமாா் 2,611 கி.மீ நீளம் கொண்ட ‘துரந்த்’ எல்லைக்கோட்டை ஆப்கானிஸ்தான் இதுவரை அங்கீகரிக்காததே இந்த நீண்டகாலப் பகைக்கு முக்கியக் காரணமாகும்.

தற்போது போா் மூண்டுள்ளதால், இரு தரப்பும் உடனடியாகச் சண்டையை நிறுத்திவிட்டுப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனா மற்றும் ரஷியா வலியுறுத்தியுள்ளன.

இதனிடையே, சவூதி அரேபியா மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சா்களுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →