முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஆலய பாதுகாப்புக்குழுவினரின் நீர்வளங்களை தூர் வாரும் விழா! நகரமன்றத் தலைவர் தொடங்கி வைத்தார்

இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிதம்பரம் நகர நீர் வளங்களை தூர் வாரும் விழா வடக்குமெயின்ரோடு அண்ணாகுளம் பகுதியில் இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிதம்பரம் நகர நீர் வளங்களை தூர் வாரும் விழா வடக்குமெயின்ரோடு அண்ணாகுளம் பகுதியில் இன்று நடைபெற்றது.

விழாவிற்கு ஆலய பாதுகாப்புக்குழு ஆலோசகர் வி.சந்திரசேகரன் வரவேற்றார்.  தலைவர் எம்.செங்குட்டுவன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியது: ஆக்கிரமிப்புகளினால் குளங்களை பாதுகாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகம், இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினருடன் இணைந்து முதல்கட்டமாக அண்ணாகுளம், ஓமக்குளம், யானைக்குளம் ஆகிய மூன்று குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினருக்கு பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். தமிழக முதல்வர் அறிவித்துள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் கூடுதலாக நிதி பெற்று நகரில் மீதம் உள்ள குளங்களை தூர்வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.நிர்மலாசுந்தர் தெரிவித்தார்.

சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் வாழ்த்துரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கோயம்புத்தூர் உக்கடத்தில் உள்ள மிகப்பெரிய குளத்தை 5 வயது பாலகன் முதல் 60 வயது முதியவர் வரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 10 பகுதிகளாக பிரித்து 10 ஞாயிற்றுக்கிழமைகளில் குளத்தை முழுமையாக தூர்வாரி தற்போது கோவை நகரின் மிகப்பெரிய நீர்ஆதாரமாக திகழ்கிறது அந்த குளம். நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் அளவிற்கு நீர் தேக்கப்பட்டுள்ளது. அதுபோல் சிதம்பரம் நகரில் தொடங்கப்பட்டுள்ள குளங்கள் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ள ஆலய பாதுகாப்புக்குழுவினருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார். ஆலய பாதுகாப்புக்குழு துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழாவில் தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன், வர்த்தக சங்கத் தலைவர் டி.டி.கே.பாண்டியன், இந்து இயக்கங்களின் அமைப்பாளர் ஜோதி.குருவாயூரப்பன், ஞானமூர்த்தி தீட்சிதர், குப்புசாமி தீட்சிதர், ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சீனுவாசன், மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் பெரு.திருவரசு, ஜெயவேல், சி.ப.க.ராஜன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் நகரில் உள்ள நீர்வள ஆதாரமாக உள்ள 12 குளங்களை தூர் வார அனுமதி வழங்க வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மாவட்ட ஆட்சியர், உதவிஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் முதல் கட்டமாக சிதம்பரம் நகரில் 3 குளங்களை தூர்வாருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் வடக்குமெயின்ரோட்டில் உள்ள அண்ணாகுளத்தை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →