சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தீமித்தனர்
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது பிரார்த்தனையை காணிக்கையாக செலுத்தினர்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. ஜூலை 29-ம் தேதி இன்று தீமிதி உற்சவத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கானோர் அங்கபிரதட்சிணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை மேற்கொண்டு தங்களது நேர்த்திகடனை மற்றும் வேண்டுதலை செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் உடலில் செடல் குத்தி வீதிவலம் வந்தனர்.
காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சக்தி கிரகம் புறப்பட்டு வீதிஉலா வந்து கோயிலுக்கு எதிரே உள்ள தீக்குழியில் மாலை 6.00 மணிக்கு இறங்கிய பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதி உற்சவத்தில் பங்கேற்றனர்.
ஜூலை 30-ம் தேதி விடையாற்றி உற்சவமும், ஆகஸ்டு 1-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் என்.வீராசாமிபிள்ளை, அறங்காவலர்கள் என்.கலியமூர்த்தி, என்.செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் அன்னதானமும், புகைப்படை கலைஞர்கள் சங்கம் சார்பில் நீர்மோரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்: தீமிதியை முன்னிட்டு பஸ்நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கீழரதவீதி, தெற்குரதவீதி சந்தி்ப்பில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் புறப்பட்டு சென்றன. கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் பேருந்துகள் நகருக்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.