முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை: மாணவர்கள் மகிழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி., எம்எஸ் மற்றும் பிஜி டிப்ளமா மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வு வைத்து அனுமதி சேர்க்கை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:00 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி., எம்எஸ் மற்றும் பிஜி டிப்ளமா மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வு வைத்து அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளது.  அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதன்முறையாக நன்கொடை எதுவும் பெறாமல் தகுதி அடிப்படையில் மருத்துவப்படிப்பிற்கு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.

பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 2013-14 கல்வி ஆண்டிற்கான ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி., எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமா மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வு வைக்கப்பட்டு எவ்வித நன்கொடை இன்றி 83 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர்.ஏழை பெண்ணுக்கு அனுமதி சேர்க்கை, கல்விக்கடன் உதவி:  அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள ஏழை மாணவி ஒருவருக்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான அனுமதி சேர்க்கை வழங்கிய போது ஆனந்த கண்ணீருடன் அனுமதி சேர்க்கை ஆணையை பெற்றுள்ளார். மேலும் அவர் கட்டணம் கட்டுவதற்கு வசதி இல்லை என நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா, வங்கி மேலாளரை அழைத்து கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்துள்ளார்.  இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 50 லட்சம் முதல் ரூ 1 கோடி தொகைக்கு மேல் நன்கொடை பெறப்பட்டு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டு வந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை, பல்கலைக்கழக நிர்வாகியின் நடவடிக்கையால் எவ்வித நன்கொடை இன்றி தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளது பல்கலைக்கழக வரலாற்றிலேயே இதுதான்தான் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ், பிபிடி, பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை முழுமையாக தகுதி அடிப்படையில் நடைபெறும் என்பதால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நுழைவுத்தேர்விற்கு  சுமார் 22500  விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →