தேமுதிகவின் செயல்பாட்டை ஆளுங்கட்சியால் முடக்க முடியாது: விஜயகாந்த்
தேமுதிகவைப் பழி வாங்குவதற்கு காவல்துறையை தனது ஏவல் துறையாக ஆளுங்கட்சி பயன்படுத்தி வருகிறதோ என்ற எண்ணம் எழக்கூடிய வகையில் தேமுதிக தொண்டர்கள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை ஏவிவிடுகின்றனர்.இதன் மூலம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில்
தேமுதிகவின் செயல்பாட்டை ஆளுங்கட்சியால் முடக்க முடியாது என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
தேமுதிகவைப் பழி வாங்குவதற்கு காவல்துறையை தனது ஏவல் துறையாக ஆளுங்கட்சி பயன்படுத்தி வருகிறதோ என்ற எண்ணம் எழக்கூடிய வகையில் தேமுதிக தொண்டர்கள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை ஏவிவிடுகின்றனர்.இதன் மூலம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஓர் அச்சத்தை உருவாக்கி தேமுதிகவின் செயல்பாடுகளை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது.திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் கோதை எஸ். மாரியப்பன் மீது குண்டர் சட்டத்தை பாய்ந்துள்ளது. அந்த பகுதியில் பிரபலமான தொழில் அதிபர் அவர். இதுவரை அவர் மீது எந்த காவல் நிலையத்திலும், எந்த வழக்கோ, புகாரோ கிடையாது.
தேமுதிகவின் மீது இந்த ஆட்சியாளர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இவ்வாறு செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் நெல்லைப் பகுதி செயலாளர் மகாராஜன், துணை செயலாளர் கணேசன், வார்டு செயலாளர் முருகன் மற்றும் துரை ஆகிய நால்வர் மீதும் பொய்யான புகாரைப் பெற்று வழக்கு தொடுத்து கைது செய்து இருக்கிறார்கள்.தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களை கைது செய்வதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, எதிர்க்கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு காவல்துறை செயல்படுகிறது.இந்த நடவடிக்கை, பிற்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு, இதுவே ஒரு முன்னுதாரணமாக மாறி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் போக்கு அதிகரிப்பதற்கு வழி வகுத்து விடாதா? எனவே இதுபோன்ற நிகழ்வுகளை கைவிட்டு விட்டு, காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.