அனைத்து முதல்வர்களுக்கும், முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார்: நாக.முருகுமாறன் எம்எல்ஏ புகழாரம்
சிதம்பரம் ஓமக்குளத்தில் குமராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ரகுநாதன் தலைமை
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும், முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார் என காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் தெரிவித்தார்.
சிதம்பரம் ஓமக்குளத்தில் குமராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ரகுநாதன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி எஸ்.கே.பி.செல்வகணபதி வரவேற்றார்.கூட்டத்தில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
ஏற்கனவே காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியில் இருந்த ஓமக்குளத்தில் 1909-ல் ஆண்கள், பெண்கள் என தனி தனியே தொடக்கப்பள்ளியை தொடங்கி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கோயிலை கட்டியவர் சுவாமி சகஜானந்தா. இத்தொகுதியில் முதல் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் 5 ஆண்டுகளாக கருணாநிதியிடம் சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என கோரி வந்தார். ஆனால் கருணாநிதி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க முன் வரவில்லை.
இந்நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரது கோரிக்கையை ஏற்று மூன்றே நாட்களில் சுவாமி சகாஜனந்தாவிற்கு மணி மண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதுபோன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புரோக்கர்கள் கையிலும், ஊழலிலும் சிக்கியது. ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. பணி பாதுகாப்பு இல்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை சீரமைத்து வருகிறார். கருவறை முதல் கல்லறை வரை மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக முதல்வர் அறிவித்து நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் நல்லாத்து நடராஜன் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினார். குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், சிவாயம் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ஏ.பி.செல்வகணபதி, வி.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.