அந்தந்த பள்ளிகளிலேயே 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு
விருதுநகர் மாவட்டத்தில் 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு(20-ம் தேதி) முதல் மதிப்பெண் பட்டியல்களை வழங்க இருப்பதால், அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்வதற்கும் ஏற்பாடு
விருதுநகர் மாவட்டத்தில் 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு(20-ம் தேதி) முதல் மதிப்பெண் பட்டியல்களை வழங்க இருப்பதால், அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 10-வது பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 31-ம் தேதி இணைய தளம் மூலம் வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வை மாணவர்கள்-14066, மாணவிகள்-13940 என மொத்தம் 28006 இத்தேர்வு எழுதினார்கள். இதில், மாணவர்கள்-13078, மாணவிகள்-13441 என மொத்தம் 26519 பேர்கள் வரையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் 20-ம் தேதி அந்தந்த பள்ளிகளிலேயே காலையில் மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அதோடு, வேலைவாய்ப்பு பதிவையும் கணிப்பொறி மூலம் உடனே பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் கணிப்பொறியுடன் இணைய தளவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 15 நாள்கள் வரையில் பதிவு செய்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான 20-ம் தேதி பதிவு மூப்பே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கு முன்பு வரையில் மதிப்பெண்கள் பெற்றதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாணவ, மாணவிகள் கூட்டமாக வ்நது குவிந்து விடுவார்கள். இதுபோன்ற காரணங்களால் நெரிசலில் நின்று பதிவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது, நெருக்கடியையும், போக்குவரத்து விரயத்தையும் தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே வேலைவாய்ப்பு பதிவுகளையும் கணிப்பொறி மூலம் மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், உடனே பதிவு செய்து, வேலைவாய்ப்பு அடையாள அட்டையும் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்தார்.