வீராணம் ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி மற்றும் பெருமாள்ஏரி, வெலிங்டன் ஏரி ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நீர்ஆதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி மற்றும் பெருமாள்ஏரி, வெலிங்டன் ஏரி ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நீர்ஆதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி சோழர்காலத்தில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியின் பிரதான கரையின் நீளம் 16 கி.மீ (லால்பேட்டை- சேத்தியாத்தோப்பு வரை). எதிர்கரையின் நீளம் 30.65 கி.மீ. பிரதான கரையில் 28 பாசன மதகுகளும், எதிர்வாய் கரையில் 6 பாசன மதகுகளும் உள்ளன. ஏரி மூலம் பாசணம் பெறும் மொத்த பரப்பளவு 44,856 ஏக்கராகும். ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக நீர் வருகிறது. மழைக்காலங்களில் பொன்னேரியிலிருந்து கருவாட்டு ஓடை மற்றும் செங்கால்ஓடை வழியாக கூடுதலாக மழை நீர் வந்தடைகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும்
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரியில் பூதங்குடி எனுமிடத்தில் சென்னை குடிநீர் அனுப்பப்படும் நீரேற்று நெடுமாடத்தை அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சென்னை குடிநீர் வாரியத்திற்க்கு ஏரியிலிருந்து எவ்வளவு கனஅடி நீர் அனுப்பப்படுகிறது எனவும், தற்போது போதிய நீரில்லாததால் ஏரியிலிருந்து நீர் அனுப்புவது எப்போது நிறுத்தப்பட்டது என்ற விபரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அமைச்சர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சென்னை குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் அன்பரசன், உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), செல்விராமஜெயம் (புவனகிரி), கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.