கரூரில் 2-ம் நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஈழத் தமிழர் பிரச்னைத் தொடர்பாக கரூரில் கல்லூரி மாணவர்கள் 2-ம் நாளாக இன்றும் மனித சங்கிலி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈழத் தமிழர் பிரச்னைத் தொடர்பாக கரூரில் கல்லூரி மாணவர்கள் 2-ம் நாளாக இன்றும் மனித சங்கிலி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தி போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை சரியான திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டு்ம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாந்தோணி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியல், ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு, வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உள்ளிருப்புப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2-ம் நாளாக வெள்ளிக்கிழமை கரூரில் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி, உள்ளிருப்புப் போராட்டம், பேரணி ஆகியவற்றில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புலியூர் செட்டி நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2 ஆயிரம் பேர் கரூர் திருச்சி சாலையில், கல்லூரியிலிருந்து புலியூர் கடைவீதி வரை கருப்பு துணியை வாயில் கட்டிக் கொண்டு ஈழத் தமிழருக்கு வாழ்வுரிமை வழங்க வேண்டும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டு்ம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கல்லூரி வாயிலில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டனர். தாந்தோணிமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2-ம் நாளாக வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரியிலிருந்து கரூர் பேருந்து நிலையம் வரையில் பேரணியில் நடத்தினர். பேரணியிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.