நிதிமுறைகேடு குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு பல்கலைக்கழக அனைத்து ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதிமுறைகேடு குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்-கூட்டமைப்பு பொதுக்குழுவில் கோரிக்கை விடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு பல்கலைக்கழக அனைத்து ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளரும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன், பொதுச்செயலாளர் ரவி உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பல்கலைக்கழக நிதிசிக்கல் குறித்து தமிழகஅரசு ஒரு நிலைப்பாடு எடுத்து கமிட்டி அமைத்து, உயர்கல்வித்துறை அரசு செயலர் அபூர்வாவர்மா 11 பிரிவுகளின் கீழ் நிதிமுறைகேடுகள் குறித்து துணைவேந்தருக்கு கடிதம் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் பல்கலைக்கழக நிறுவனர் தனது அதிகாரத்தையும், உரிமையையும் துஷ்பிரயோகம் செய்ததுதான் நிதிசிக்கலுக்கு காரணம் என ஆனித்தரமாக கூறியுள்ளார். மேலும் அக்கடிதத்தில் அந்த அதிகாரத்தை ஏன் குறைக்கக்கூடாசு என சிறப்பு செனட், சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி கருத்தை கேட்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் நடைபெற்ற சென்ட, சிண்டிகேட் கூட்டத்தில் ஒரு சிலர் முரண்பாடுகளான கருத்துகளை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக இணைவேந்தரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டதாக செனட், சிண்டிகேட் உள்ளது. இது சரியான கருத்தை பிரதிபலிக்காது என ஆசிரியர்- ஊழியர் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே தமிழகஅரசு செனட், சிண்டிகேட்டை கலைத்துவிட்டு, மற்ற அரசு பல்கலைக்கழகங்களின் நடைமுறைப்படி செனட், சிண்டிகேட் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும் உயர்கல்வித்துறை அரசு செயலர் கடிதத்தில் தெரிவித்துள்ள நிதிமுறைகேடுகள் குறித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சரை இணைவேந்தராக நியமிக்க வேண்டும், 12500 ஆசிரியர், ஊழியர்களுக்கு ஊதிய குறைப்போ, ஆள்குறைப்போ செய்யக்கூடாது என்ற உத்திரவாதத்தை அளிக்க கோரியும் வருகிற மார்ச் 27-ம் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் படிப்பு மையங்களில் உள்ள ஆசிரியர், ஊழியர்கள் மற்றும் ஆதரவு சங்கங்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக போலீஸ் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு அரசு பல்கலைக்கழகம் என உயர்கல்வித்துறை செயலரின் கடிதம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அலுவலக அறைகளில் ஆசிரியர்-ஊழியர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தை பொருத்தவுள்ளோம் என தெரிவித்தார்.
அப்போது பொதுச்செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.