ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக காடுகள் தின விழா
உலக காடுகள் தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
உலக காடுகள் தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்று ஆசிரியை ந.ரெங்கலதா பேசுகையில் கூறியதாவது: கால நிலை சீராக இருக்க காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவிற்கு காடுகள் உள்ளன. இதில் சுமார் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. சமுதாயத்திற்கு தாவரங்கள் பல வழிகளில் நன்மை தருகின்றன. காடுகள் என்பவை வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. காடுகளின் உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது. காடுகள் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. இன்றைய சூழலில் மரங்களைப் பார்ப்பது அரிதாகிறது. சாலை, ரயில் பணிகளுக்காக ஏற்கனவே இருக்கும் மரங்களை அரசு வெட்டித் தள்ளுகிறது. வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயினால் மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன. உலக வனத்துறை சட்டப்படி ஒரு மரத்தை வெட்டும் போது 10 மரங்கள் நடப்பட வேண்டும். அப்படியிருந்தும் ஒரு சதவீதம் மட்டுமே புதிய மரங்கள் நடப்படுகின்றன.
காடுகளை பாதுகாக்கவும், புதிய காடுகளை உருவாக்கவும், இருக்கும் மரங்களை பாதுகாக்கவும் மாணவர்கள் உறுதி ஏற்கவேண்டும் என்றார் அவர்.
Advertisement