ஸ்ரீவிலி. ஹோட்டலில் தகராறு: இருவர் பலத்த காயம்: நால்வர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக நால்வரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக நால்வரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி தாலுகா, செங்கமலநாச்சியார்புரம்-கங்காகுளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துக்குமார் (32) மற்றும் கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பாண்டியராஜ் (32) ஆகிய இருவரும் டிராக்டர் ஒன்றை பழுது நீக்கம் செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பழுது நீக்கும் இடத்தில் டிராக்டரை விட்டுள்ளனர்.
முத்துக்குமார் மற்றும் பாண்டியராஜ் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மங்காபுரம் விலக்கிற்கு எதிரேயுள்ள ராஜபாண்டி ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர்.
Advertisement
சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்துக்குமார், தயிர் வெங்காயம் கேட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த இந்திராநகர்-சத்யாநகரைச் சேர்ந்த க.செல்வராஜ் (52) என்பவர் ஒரு தடவைதான் தயிர் வெங்காயம் தருவோம். மீண்டும் தர முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செல்வராஜ், சாப்பிட வந்த இருவரையும் ஆபாசமாகப் பேசியுள்ளார். கடையில் இருந்த மங்காபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மா.திருமாலைமுத்து (30) மற்றும் ஆராய்ச்சிபட்டி தெருவைச் சேர்ந்த செ.கண்ணன் (54) ஆகியோர் கம்பி மற்றும் விறகுக் கட்டையால் முத்துக்குமாரையும், பாண்டியராஜையும் பலமாக தாக்கியுள்ளார்கள். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். மேலும் இருவரும் கடையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்கள். ஆனால் கடையில் இருந்த மங்காபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த நா.காளியப்பன் (44) மற்றும் சேகர் ஆகியோர் ஓடிய இருவரையும் பிடித்துக் கொள்ள மீண்டும் இருவரையும் பலமாக தாக்கியுள்ளார்கள். இதில் பலத்த காயமுற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸில் முத்துக்குமார் கொடுத்தத புகாரின் பேரில் செல்வராஜ், திருமாலைமுத்து, கண்ணன், காளியப்பன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கடை தரப்பில் புகார்: ஹோட்டல் தரப்பில் ம.மாடசாமி (57) என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கங்காகுளத்தைச் சேர்ந்த அ.பாண்டியராஜ் மற்றும் மு.முத்துக்குமார் ஆகியோர் கடையில் சாப்பிட்டுவிட்டு, அதற்கான பணத்தை தர மறுத்து தகராறு செய்ததாகவும், மேலும் மாடசாமியை ஆபாசமசாகப் பேசி கடையில் இருந்த ரூ.1500 மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி, மிரட்டியதாகவும் புகார் செய்துள்ளார். இதன் பேரில் போலீஸார் பாண்டியராஜ் மற்றும் முத்துக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.