குரூப் 2 வினாத்தாள் வெளியான சம்பவம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை
தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வணிகவரித்துறை துணை ஆணையர் ரவிக்குமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வணிகவரித்துறை துணை ஆணையர் ரவிக்குமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2012-ம் ஆண்டில் நடந்த குரூப் 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 பேரை ஈரோடு போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு கோவை சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நாகை வணிக வரித்துறை துணை ஆணையர் ரவிக்குமார் (32) என்பவரை சிபிசிஐடி போலீஸார் மே 16-ம் தேதி கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரவிக்குமார், கடந்த ஓராண்டாக நாகையில் பணியாற்றி வந்தார். இவர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இநந்நிலையில் இவரை ஒருவாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி ஈரோடு குற்றவியல் நடுவர் மன்றத்தில் (எண்: 3) சிபிசிஐடி போலீஸார் மனு அளித்திருந்தனர். இம்மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாஜிஸ்திரேட் கவிதா, கைது செய்யப்பட்ட ரவிக்குமாரை மே 24-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.