வைகை, பேச்சிப்பாறை, அமராவதி அணைகளை தூர்வார விரைவில் கள ஆய்வு செய்யப்படும்: பொதுப்பணித்துறை அமைச்சர்
வைகை, பேச்சிப்பாறை, அமராவதி அணைகளை தூர்வார விரைவில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறினார்.
வைகை, பேச்சிப்பாறை, அமராவதி அணைகளை தூர்வார விரைவில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிட மறுத்ததாலும் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதை கருத்தில்கொண்டு டெல்டா பாசன விவசாயிகள் மட்டுமன்றி சென்னை தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு ரூ.1,560 கோடியில் காவிரி டெல்டா வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,560 கோடியில் கால்வாய்கள், அணைகள் மற்றும் ஏரிகள் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள், பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் ஒரே நேரத்தில் அவைகளை தூர்வாருவது சாத்தியம் இல்லை. முதல்கட்டமாக மதுரை மாவட்டம் வைகை அணை, கன்னியாக்குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை ஆகியவற்றை தூர்வாருவது தொடர்பாக கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் நடைபெறும்.
கள ஆய்வு அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டுச்சென்று பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும். மக்களின் கவனத்தை திசை திருப்ப தேவையற்ற அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி தினமும் வெளியிட்டு வருகிறார். அவரது அறிக்கையை மக்கள் நம்பமாட்டார்கள்.
மத்திய அரசில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக அங்கம் வகித்த கருணாநிதி, தமிழக நலனுக்காக ஒரு துளி நன்மைகூட செய்யவில்லை. ஆட்சியில் இருக்கும்போது தனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த அவர், ஆட்சியில் இருந்து விலகிய பின்னர் மக்கள் பற்றி சிந்திக்கிறார் என்றார்.