தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர் விபத்தில் சாவு: மூவர் காயம்
அம்பாசமுத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்து இறந்தார். காயமடைந்த மூவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்து இறந்தார். காயமடைந்த மூவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால்பொதுக்குடியை சேர்ந்த வேலையா மகன் பெருமாள் (33). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த பெருமாள் மோட்டார் சைக்கிளில் தனது தம்பி சிவசுப்பிரமணியனுடன் சனிக்கிழமை அம்பாசமுத்திரம் வந்து கொண்டிருந்தார்.
முக்கூடலை சேர்ந்த ஹரிராம் மகன் ரவி (29). இவர் மோட்டார் சைக்கிளில் அம்பாசமுத்திரம் வந்து விட்டு, நண்பர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மாரிமுத்துவுடன் முக்கூடலை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அம்பாசமுத்திரம் அருகே கல்லூரி சாலையில் வந்தபோது, பெருமாள், ரவி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த சிவசுப்பிரமணியன், ரவி, மாரிமுத்து ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.