ஏற்காடு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாறனை வெற்றி பெறச் செய்யுமாறு அத்தொகுதி வாக்காளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள்
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாறனை வெற்றி பெறச் செய்யுமாறு அத்தொகுதி வாக்காளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இடைத்தேர்தல்கள் வருவதுண்டு. ஆனால், ஏற்காடு இடைத்தேர்தலைப் போல, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது எப்போதும் நடந்ததில்லை.
Advertisement
ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தவுடன், அதற்கு ஆதரவு கேட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதினேன். அதனை ஏற்று சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. சில கட்சிகள் மேலிடத்திடம் கேட்டு முடிவு செல்வதாக தெரிவித்தன. சிலர் பதிலே தெரிவிக்கவில்லை.
ஏற்காடு இடைத்தேர்தலில் முதன் முதலில் வேட்பாளரை அறிவித்தது திமுக தான். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் திமுக வேட்பாளர் மாறன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆனால், ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமுறை மீறி செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகும் ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை நடத்துகிறார்கள். இதனை திமுகவினரால் சமாளிக்க முடியுமா எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தழைக்க திமுக வேட்பாளர் மாறன் வெற்றி பெற ஏற்காடு தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.