ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி
தமிழகத்தில் டிச. 4 ம் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் 3 வது அணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க இருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் டிச. 4 ம் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் 3 வது அணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க இருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் புதன்கிழமை திருநெல்வேலியில் அளித்தப் பேட்டி: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் அல்லாத மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது.
சமாஜ்வாதி கட்சி தேசிய அளவில் இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் 3 வது அணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் 250 க்கும் அதிகமான தொகுதியில் 3 வது அணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார் என முடிவு செய்யப்படும்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு நாடு முழுவதுக்கும் அலை வீசுவதாக அக்கட்சி தெரிவித்து வருகிறது. ராஜஸ்தான், தில்லி, மத்திய பிரதேசம் மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி உள்ளது. உத்தரபிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, பீகார் போன்ற பிற மாநிலங்களில் மாநில கட்சி்களின் ஆதிக்கம்தான் உள்ளது. பாரதிய ஜனதா குறிப்பிடுவதைபோல் மோடிக்கு அலை இல்லை.
தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும். மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து வரும் டிச. 21 ம் தேதி மாநில அளவிலான தொண்டர்கள் மாநாடு சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தேசியத் தலைவர் முலாயம்சிங்யாதவ், உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ், தேசிய பொதுச்செயலர் ராம்கோபால்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் டிசம்பர் 4 ம் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வரும் 2014 ம் ஆண்டு பிப். 23 ம் தேதி திருநெல்வேலியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, ராமனாதபுரம் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தேசியத் தலைவர் முலாயம்சிங்யாதவ் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.
பேட்டியின்போது கட்சியின் மாநில செய்திதொடர்பாளர் முத்துகிருஷ்ணன், மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் நெல்லைஇமாம், மாவட்டத் தலைவர் சரவணன், மாநில இலக்கிய அணித் தலைவர் குருசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.