திருவண்ணாமலை: காவலரின் தாயிடம் நூதன முறையில் தங்க சங்கிலி பறிப்பு
திருவண்ணாமலை போக்குவரத்துப் பிரிவு காவலரின் தாயிடம் இருந்து நூதன முறையில் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி, செல்போனை பறித்துச் சென்ற
திருவண்ணாமலை போக்குவரத்துப் பிரிவு காவலரின் தாயிடம் இருந்து நூதன முறையில் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி, செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை, முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜானகியம்மாள் (63). இவரது மகன் மனோகரன், திருவண்ணாமலையில் போக்குவரத்துப் பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருகிறார். ஜானகியம்மாள், கடந்த 9-ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடச் சென்றார்.
சாமி தரிசனம் முடிந்து அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வெளியே வந்தபோது, ஒரு பெண் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் ஜானகியம்மாளிடம் பேச்சுக்கொடுத்துள்ளது. நாங்கள் மூவரும் போலீஸ்காரர்கள். திருச்சியில் இருந்து தீபத் திருவிழா பாதுகாப்புக்கு இங்கு வந்துள்ளோம். இங்குள்ள பச்சையம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியைக் காட்ட முடியுமா என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து, ஜானகியம்மாள் அவர்களுடன் காரில் ஏறி பச்சையம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது, மூவரும் சேர்ந்து கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதும் ஜானகியம்மாள் மயக்கம் அடைந்தாராம். பின்னர், ஜானகியம்மாளின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி, செல்போன், ரூ.100 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனராம்.
பின்னர், அவரை காரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அம்மனி அம்மன் கோபுரம் பகுதிக்கு வந்து இறக்கி ஓரிடத்தில் அமரவைத்து விட்டுச் சென்று விட்டனராம். இதுகுறித்து, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.