மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது: ப. சிதம்பரம்
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து
மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியது:
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஏற்றுமதி செய்வது தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 6.3 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அக்டோபரில் 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Advertisement
பல்வேறு உலக நாடுகளோடு ஒப்பிடும்போது நமது நாட்டில் ஏற்றுமதி தற்போது அதிகரித்துள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டுமானால் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். இறக்குமதி குறைய வேண்டுமானால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதனால் நமது அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது. பணவீக்கம் அதிகரிக்கிறது. பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, இறக்குமதி செய்து வரும் பொருள்களை உற்பத்தி செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது நாட்டில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக சுமார் 70 சதவீத ஏற்றுமதிப் பொருள்கள் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. இதுபோன்ற சிக்கல்கள் தீர ஏற்றுமதி செய்வதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்க நடவடக்கை எடுக்கப்படும்.
ஏற்றுமதித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் அதிக அளவில் கடன் உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் ப. சிதம்பரம்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகம்மது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். நரேந்திரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.