முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவரை தாக்கிய ஆசிரியை: தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை, சாலைமறியல்

சிதம்பரம் அருகே துணிஞ்சிரமேடு எனுமிடத்தில் இன்டர்நேஷனல் அதீனா குளோபல் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் யுகேஜி மாணவர் நிஷாந்தன் கல்வி கட்டண நிலுவைத்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

சிதம்பரம் அருகே கல்வி கட்டணம் கட்டவில்லை எனக்கூறி மாணவரை அடித்து, காவலாளி அறையில் உட்கார வைத்ததை கண்டித்து பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே துணிஞ்சிரமேடு எனுமிடத்தில் இன்டர்நேஷனல் அதீனா குளோபல் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் யுகேஜி மாணவர் நிஷாந்தன் கல்வி கட்டண நிலுவைத் தொகை கட்டவில்லை எனக்கூறி ஆசிரியை ரம்யா என்பவர் அவரை அடித்து பள்ளி முகப்பில் உள்ள காவலாளி அறையில் உட்கார வைத்ததாகக் கூறப்படுகிறது. மாலை மாணவரை அழைக்கைச் சென்ற மாணவரின் தந்தையும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சிவக்குமார் விபரம் அறிந்து உள்ளே சென்று பள்ளி நிர்வாகி அப்துல்வகாப், முதல்வர் பாலதண்டாயுதம் ஆகியோரிடம் தனது மகனுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் வங்கி மூலம் கட்டிவிட்டதாகவும், அப்படியிருக்கையில் ஏன் அடித்து வெளியில் உட்கார வைத்துள்ளீ்ர்கள் என கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பள்ளி டிரைவர் செந்தில், சிவக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மகனும், தானும் தாக்கப்பட்டது குறித்து தந்தை சிவக்குமார் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் இச்சம்வம் அறிந்த ஊர்மக்கள் மற்றும் பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம்- புத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சமரசப்படுத்தி, அவர்களை பள்ளி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தைக்கு உள்ளே அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகத்தினரும் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவிற்கு எட்டாத நிலையில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பள்ளிக்கு சென்று பள்ளி உரிமையாளர் சந்திரசேகரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்விக்கட்டணம் கட்டுவது குறித்து பெற்றோரை அழைத்துதான பேச வேண்டுமே தவிர, குழந்தைகளை தண்டிக்க உங்களுக்கு உரிமையில்லை. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என கண்டித்தார். பின்னர் மாணவரை தாக்கிய ஆசிரியையும், தந்தையை தாக்கிய டிரைவரும் மாணவரின் தந்தை சிவக்குமாரிடம் மன்னிப்பு கேட்டதால் பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.