வரதட்சிணை கேட்டு மனைவியை துன்புறுத்திய உதவிப் பேராசிரியர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கைது
சிதம்பரம் அருகே வரட்சிணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் அவரது தந்தையான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆகிய இருவர்
சிதம்பரம் அருகே வரட்சிணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் அவரது தந்தையான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி. இவரது மகள் மணிமேகலைக்கும் (25), அருகே உள்ள மஞ்சக்குழி மணல்மேட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி மகன் ஜெயமுருகனுக்கும் (30) கடந்த 8 மாதங்கள் முன்பு பி.முட்லூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 35 பவுன் நகைகள் போட்டு, மாப்பிள்ளைக்கு காரும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மனைவி மணிமேகலையிடம் தந்தை மேலும் பணம் வாங்கி வருமாறு கணவர் ஜெயமுருகனும், அவரது தந்தை சக்கரவர்த்தியும் அடித்து துண்புறுத்தி வந்ததாகவும், தற்போது பணம் வாங்கி வரவில்லையென்றால் வெட்டிக் கொலை செய்து புதைத்து விடுவோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிமகேலை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு கணவர் ஜெயமுருகன், மாமனார் சக்கரவர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.