முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசுப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி: ஒரு பெண் உள்பட 2 பேர் கைது

நாகை மாவட்டம், குத்தாலம், காஞ்சிவாய் பேராவூர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மகன்கள் ராஜேஷ்குமார்(25), சுந்தர்(22). ராஜேஷ்குமார் பொறியியல் பட்டம் பெற்றவர். சுந்தர் இளங்கலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

நாகை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்த 2 பேருக்கு அரசுப் பணி வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 11 லட்சம் மோசடி செய்ததாக ஒரு பெண் உள்பட 2 பேர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம், குத்தாலம், காஞ்சிவாய் பேராவூர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மகன்கள் ராஜேஷ்குமார்(25), சுந்தர்(22). ராஜேஷ்குமார் பொறியியல் பட்டம் பெற்றவர். சுந்தர் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். இவர்கள் 2 பேரும் அரசுப் பணி வாய்ப்புப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்துத் தகவலறிந்த திருவிடைமருதூர், பழிஅஞ்சியநல்லூர் பகுதியைச் சேர்ந்த உ. சத்தியமூர்த்தி(27) என்பவர் ராஜேஷ்குமாரை அணுகி, தனக்குப் பழக்கமான ஒரு பெண், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும், அவர் மூலம் 2 பேருக்கும் அரசுப் பணி வாய்ப்புப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு சகோதரர்கள் 2 பேரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் நாகைக்கு அழைத்துச் சென்ற சத்தியமூர்த்தி,  நாகை மாவட்டம், திருக்குவளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பொ. சிந்துஜா(25) என்பவரை, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் சந்திக்கச் செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிந்துஜா பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.அப்போது, சிந்துஜா 2 பேருக்கும் அரசுப் பணி வாய்ப்புப் பெற்றுத் தருவதற்கு பணம் அதிகம் செலவாகும் எனக் கூறியுள்ளார். அதற்கு சகோதரர்கள் 2 பேரும் சம்மதம் தெரிவித்தைத் தொடர்ந்து, சிந்துஜாவும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து பல தவணைகளாக ராஜேஷ்குமார் மற்றும் அவரது சகோதரரிடமிருந்து ரூ. 11 லட்சம் பணம் வசூலித்துள்ளனர்.

பணம் அளித்துப் பல மாதங்களாகியும் பணி வாய்ப்புக் கிடைக்காததால், சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜாவுக்கு ராஜேஷ்குமார் நெருக்கடி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜேஷ்குமாருக்கு மின்வாரிய இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும், சுந்தருக்கு வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையையும் அவர்கள் அளித்துள்ளனர்.இந்தப் பணி ஆணையுடன், தொடர்புடைய அலுவலகங்களுக்கு ராஜேஷ்குமாரும், சுந்தரும் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற போது, அந்தப் பணி நியமன ஆணைகள் போலியானவை என்பது தெரியவந்தது.

இது குறித்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தர் புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி, அந்தப் புகார் மனு நாகை மாவட்டக் குற்றப்பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.நாகை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பாண்டி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிந்துஜா மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றுவபரல்ல என்பதும், அவர் சத்தியமூர்த்தியுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சிந்துஜா மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →