முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கையிலிருந்து சிறை மீண்ட நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் நாகை திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 31 பேர், புதன்கிழமை இரவு நாகை மற்றும் காரைக்கால் வந்தடைந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

இலங்கை சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 31 பேர், புதன்கிழமை இரவு நாகை மற்றும் காரைக்கால் வந்தடைந்தனர்.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 9 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 65 மீனவர்கள், கடந்த ஜூலை 30-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதில், 34 பேர் பருத்தித்துறை ஜப்னா சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டனர். பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாகை மீனவர்கள் 21 பேரையும், காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் விடுதலை செய்து அந்த நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி உத்தரவிடப்பட்டது. 34 மீனவர்களும் தங்கள் படகுக்காக இலங்கையிலேயே தங்கியிருந்து, படகு கிடைக்காமல் செப். 22-ம் தேதி ஊருக்குத் திரும்பினர்.

திரிகோணமலை சிறையிலிருந்து...

திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 31 மீனவர்களின் விடுதலை தொடர்ந்து கேள்விக் குறியாக இருந்த நிலையில், அவர்கள் 31 பேரும் செவ்வாய்க்கிழமை யாழ்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். அப்போது, மீனவர்கள் 31 பேரையும் விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, 31 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  பின்னர், அவர்கள் 31 பேரும் புதன்கிழமை காலை ராமேஸ்வரம் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நாகை மீன்வளத் துறை ஆய்வாளர் மனுநீதிச்சோழன் மற்றும் மீனவப் பஞ்சாயத்தார் ராமேஸ்வரம் சென்று, நாகை மீனவர்கள் 16 பேரையும் ஒரு வேனில் செவ்வாய்க்கிழமை இரவு நாகைக்கு அழைத்து வந்தனர்.

சிறை மீண்ட மீனவர்கள் 16 பேரும் நாகை மீன்வளத் துறை அலுவலகத்தில், மீன்வளத் துறை இணை இயக்குநர் சுப்புராஜை சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், சிறை மீண்ட மீனவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். இதே போல, காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் சென்ற மீனவர்கள் 15 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு காரைக்காலைச் சென்றடைந்தனர்.

மகிழ்ச்சியளிக்காத விடுதலை :

சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் அடைபட்டிருந்து, வேகாத அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தை சாப்பிட்ட சிறை மீண்ட எங்களுக்கு இதுவரை உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவில்லை. எங்கள் விசைப் படகுகள் திரும்பக் கிடைக்கும் போது தான் எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என சிறை மீண்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

60 நாள்களுக்கும் மேலாக நாங்கள் சிறையிலிருந்ததால், எங்கள் குடும்பங்கள் சொல்ல முடியாத துன்பங்களை சந்தித்துள்ளன. இனியும், விசைப் படகு திரும்பக் கிடைப்பதில் இழுபறி நீடித்தால்,  நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என மீனவர்கள் சிலர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →