விருதுநகர் மாவட்டத்தில் கதர் விற்பனை நிலையங்கள் மூலம் கதர், பாலியெஸ்டர் மற்றும் பட்டு ரகங்களை விற்பனை செய்வதற்கு ரூ.1.04 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசியதாவது: இம்மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு, கதர் ரகங்கள், போர்வைகள், பாலியஸ்டர், கம்பளி, பட்டு சேலைகள், பாவடைகள் மற்றும் மெத்தைகள், விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், தேவையின் அடிப்படையில் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களுக்கும் சீருடை வகைகளும் செய்து வழங்கப்படுகிறது. மேலும், அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு 8 தவணைகளில் செலுத்தும் வகையில் கடனாகவும் வழங்கப்படுகிறது. தற்போது, காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கதர், பாலியஸ்ட்ர் மற்றும் பட்டு உள்ளிட்ட ரகங்களுக்கு தலா 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பொதுமக்களும், வாடிக்கையாளர்கள், அரசு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த செப்-1ம் தேதி முதல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தாற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கி நடைபெறுகிறது. இவை தீபாவளி திருநாள் வரையில் விடுமுறை நாள்களிலும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.1.01 கோடிக்கு கதர் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டிலும் ரூ.1.04 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட இல்ககை அடைய அனைத்து துறை அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கதர் மற்றும் பட்டு ரகங்களை வாங்கி பயனடைய வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
அதற்கு முன்னதாக கைத்தறி துணி நூல் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் நாகரத்தினம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.