அண்ணாமலைப் பல்கலை. அரசு கட்டுப்பாட்டில்: சிதம்பரத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் கடும் சரிவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகளவில் ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனம், அனுமதி சேர்க்கைக்கு புரோக்கர்கள் மூலம் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழகஅரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததால் சிதம்பரம் நகரில் ரியல்எஸ்டேட் மற்றும் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகளவில் ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனம், அனுமதி சேர்க்கைக்கு புரோக்கர்கள் மூலம் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா மே.16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. சட்டத்திருத்த மசோதாவிற்கு அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 13500 ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
மேலும் இந்த ஆண்டு அனுமதி சேர்க்கை முழுவதுமாக தகுதி அடிப்படையில் புரோக்கர்கள் இல்லாமல் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் அனுமதி சேர்க்கையில் பல்கலைக்கழகத்தை நம்பி பணம் சம்பாதித்து வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வசதி படைத்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை பணம் கொடுத்து சேர்க்கும் அனுமதி சேர்க்கையும் குறைந்தது. இதனால் பண புழக்கமும் குறைந்தது. மேலும் ஊதியம் குறைக்கப்படுமோ, வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் தங்களது செலவினை குறைத்து சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தை நம்பி சிதம்பரம் நகரில் தொடங்கப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் ஷாப்பிங் வியாபாரம் கடும் சரிவை அடைந்துள்ளது என வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த ஒருவர்.
குறிப்பாக பல்கலைக்கழகத்தை நம்பி சிதம்பரம் நகரில் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் தங்களது கிளையை தொடங்கியது. முன்பு இருந்த பல்கலைக்கழக நிர்வாகம் வைத்திருந்த டெபாசிட் தொகைகளை தற்போதைய நிர்வாகம் திரும்ப பெற்றதால் வங்கிகளின் முதலீட்டு குறியீடுகள் குறைந்தது. மேலும் ஊழியர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவதையும் நிறுத்திவிட்டன. இதனால் வங்கிகள் தங்களது குறியீட்டை எட்ட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளன.
நகரில் பல்கலைக்கழகத்தை நம்பி சுமார் 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையினால் பணம் படைத்தவர்கள் விடுதிகளில் தங்குவோர் எண்ணிக்கை குறைந்ததால் விடுதி உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்தால் போதும் அனுமதி சேர்க்கை கிடைத்துவிடும், தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தைகளை தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்க வைத்து படிக்க வைத்து வந்தனர். தற்போது முழுமையாக தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டதால் ஏழை எளிய படித்த மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழக விடுதியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
சென்னை நகருக்கு ஈடான விலையில் நகரில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. தற்போது விலை மிகவும் குறைந்து சரிவு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்து அனுமதி சேர்க்கை பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணாமலைநகரைச் சுற்றியுள்ள மாரியப்பாநகர், முத்தையாநகர், கோவிந்தசாமி நகர், மண்ரோடு, புகையிலை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மாணவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். தற்போது பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டதால், குறிப்பாக அனைத்து வீடுகளும் காலியாக உள்ளனர். வீடு வாடகைக்கு விடப்படும் என போர்டுகள் நிரந்தரமாக தொங்க விடப்பட்டுள்ளது.
ஸ்ரீநடராஜர் கோயிலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நம்பிதான் சிதம்பரம் நகரில் வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம். சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி செல்வதற்கான சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றொரு வாழ்வாதாரமான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் படி. படியாக சிதம்பரம் நகரில் ரியல்எஸ்டேட் தொழில் மற்றும் ஹோட்டல்கள் கடும் சரிவை அடைந்துள்ளது.