முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரமாணர் சங்கம் கோரிக்கை
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முற்பட்ட சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட பிராமணர்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முற்பட்ட சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட பிராமணர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிதம்பரம் கீழபுதுத்தெரு வேதபாராயண மடத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவரும், மாவட்டத் தலைவருமான வி.அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் எஸ்.சீனுவாசநாராயணன், மாநிலச் செயலர் கே.திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வி.சந்திரசேகர் வரவேற்றார். தலைவர் வி.அருணாசலம் சிறப்புரையாற்றினார்.
பொதுச்செயலாளர் கி.ரவிச்சந்திரன் தீர்மானங்களை படித்தார். ரா.முத்துக்கிருஷ்ணன் வரவு, செலவு அறிக்கையை சமர்பித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.வி.ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவர் கூத்தப்பாக்கம் ஜெய.ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பென்கள் பெற்ற 25 மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர். ரா.முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் இந்து கோயில்களையும், அக்கோயில் சொத்துக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து மாற்றி தன்னாடி பெற்ற அமைப்பாக இந்துமதப் பெரியோர்கள் மற்றும் பக்தர்கள் மட்டுமே நிர்வகிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்; மணியாச்சி வீரவாஞ்சிநாதன் மணி மண்டபம் தாமதமின்றி உடன் திறக்க வேண்டும்; தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியாரின் பெயர் சூட்ட வேண்டும்; தமிழக அரசின் வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இதர சமூகங்களுக்கு வழங்கப்படும் உச்சவயது வரம்பு விலக்கு, முற்பட்ட சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்க வேண்டும்; அக்.20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து திரளானோர்கள் சென்று பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.