முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அருகே பாசன வாய்க்காலை, தாங்களே தூர்வாரிய விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு வீராணம் ஏரி பாசனம் மூலம் 40 ஆயிரம் ஏக்கர்களிலும், வடக்குராஜன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே பாசன வாய்க்காலில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் கழிவுகளை விவசாயிகளே தாங்களே அகற்றி தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு வீராணம் ஏரி பாசனம் மூலம் 40 ஆயிரம் ஏக்கர்களிலும், வடக்குராஜன் வாய்க்கால் பாசனம் மூலம் 20 ஆயிரம் ஏக்கர்களிலும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதைத்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த 20 தினங்களுக்கு மேலாக அடித்து வரும் கடும் வெய்யலால் போதிய நீரின்றி நேரடி நெல் விதைப்பு முறையில் விதைத்த நெல்பயிர்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும் ஆகஸ்டு மாதம் கடந்த 6 மாதங்களாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் நீரின்றி வறண்டு கிடந்தது. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தூர்வார வேண்டிய பொதுப்பணித்துறையினர் தூர் வாரவில்லை. இதனால் வாய்க்கால்கள், ஆறுகள் புதர்மண்டியும், ஆகாயத்தாமரை மண்டியும் தூர்ந்து போனது.

இந்நிலையில் வீராணம்ஏரியில் உள்ள ராதா மதகிலிருந்து ராதா வாய்க்காலில் பாசனத்திற்கு கடந்த மாதம் திறந்துவிட்டப்பட்டது. ராதா வாய்க்காலின் மொத்த நீளம் 9.600 கி.மீட்டராகும். இந்த வாய்க்கால் மூலம் சுமார் 1600 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. புத்தூர், நெடுஞ்சேரியில் கறிகடை கழிவுகள், வாரசந்தை கழிவுகள், டாஸ்மாக கடை பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் வாய்க்காலில் அடைத்து கொண்டு நின்று கொண்டிருக்கிறது. இவையல்லாம் ஆகாயத்தாமரையும் சேர்ந்து அடைத்துக் கொண்டு இருப்பதால் நீர் கடை, மடை பகுதிக்கு செல்லவில்லை. இதனால் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள கடை, மடை பகுதி விவசாயிகள் நீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதால் ராதா வாய்க்கால் பாசன விவசாய சங்கத் தலைவர் ரங்கநாயகி தலைமையில் தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ரங்கநாயகி தெரிவித்ததாவது:

ராதா வாய்க்கால் 2008-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் தூர்வாரப்படவே இல்லை. இதனால் நெடுஞ்சேரியில் வாரசந்தை கழிவு, கறிகடை கழிவுகள், ஆகாயத்தாமரைகள் அடைத்து வாய்க்கால் முற்றிலும் தூர்ந்து போய் உள்ளது. வாய்க்காலை தூர்வாரும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணிததுறையினரிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. விவசாயிகளை திரட்டி சாலைமறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தோம். விரைவில் தூர்வாருவதாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதனை தடுத்து நிறுத்தினர். தற்போது ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு பெருங்காலூரை தாண்டி கடை, மடை பகுதிகளான வடமூர், கூடுவெளி, கொடியாளம், உச்சிபூலாமேடு, பரிவிளாகம், முகையூர் ஆகிய பகுதிகளுக்கு நீர் செல்லவில்லை. பொதுப்பணித்துறையினரை நம்பி பயனில்லை என்பதால் நாங்களே விவசாயிகளை திரட்டி தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து தூர்வாரி வாய்க்காலில் நீர் கடை, மடை பகுதி வரை செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என ரங்கநாயகி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.