முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூ கோரிக்கை

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அமைத்திட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை கொறடாவும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அமைத்திட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை கொறடாவும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக வரலாற்றில் தலைசிறந்த சமூக சிந்தனையாளராக வாழ்ந்தவர் வள்ளலார். ஜாதி, மத வேறுபாடுகளையும், மூடபழக்க வழக்கங்களையும் எதிர்த்து குரல் கொடுத்தவர். ஏழை, எளிய மக்களின் பசியை போக்க தருமசாலை அமைத்து உணவு படைத்தவர். அச்சிறப்பு வாய்ந்த வள்ளலார் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சென்னை எழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள 39-ம் எண் கட்டடத்தில் வசித்து வந்துள்ளார். அவர் வாழ்ந்த வீட்டை கிரயம் பெற்று நினைவகமாக அமைத்திட வேண்டும்.

மேலும் சிதம்பரம் நகரம் சங்க காலம் முதல் வரலாற்று சிறப்பு தொன்மை வாய்ந்த நகரமாகும். இங்கு அமைத்துள்ள தில்லை நடராஜர் கோயில் பண்டைய வரலாற்று ஓலைச்சுவடியும், கல்வெட்டுகளையும் கொண்டதாகும். இந்நகரில் ஓமக்குளத்தை தூர்வாரும் போது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 கிணறுகள் இருப்பதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நந்தனார் யாகம் வளர்த்தற்கான தடயங்கள் இங்குள்ளன. இந்த ஓமக்குளத்தை தொல்லியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் பல வரலாற்று உண்மைகளை அறிந்த கொள்ள வாய்ப்பு ஏற்படும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.